திருச்சியில் நடந்த கொலை வழக்கில் 10 பேர் கைது
திருச்சியில் நடந்த கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் பொன்னேரிபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ் (வயது 25) என்பவர், தனது லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. இதில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டும், கைவிரல்கள் துண்டிக்கப்பட்டும் சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் உயிரிழந்தார்.
திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு சின்ராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அலெக்ஸ், சரத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அலெக்ஸ் என்பவரின் தம்பிதான் பெலிக்ஸ் என்பதும், பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஞானவேலன், நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
இது தொடர்பாக, சின்ராசுவின் சகோதரர்களான பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு, ஜேஜே நகரை சேர்ந்த ஜெயராமன் மகன்கள் சக்திவேல் (வயது 21), ரமேஷ் (வயது 26), அவரது நண்பர்கள் சுப்பிரமணியபுரம் மீன்கிரஸ் தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் மனோஜ் (எ) மனோஜ்குமார் (வயது 19), குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் சுபாஷ் (வயது 19), சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த மகேந்திரவர்மா மகன் நிஜி (எ) பிரகாஷ் (வயது 19), சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த மகேந்திரன் மகன் கிஷோர் (வயது 19), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரபேல் மகன் ஜோஸ்வா பீட்டர் (வயது 21), பொன்மலைப்பட்டி மல்லிகை தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மனோஜ் (எ) மனோஜ்குமார் (வயது 21), கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சிவராம் (எ) மான் (வயது 23), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரபேல் மகன் டார்வின் ஆன்ரோ (வயது 24) ஆகிய 10 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் மற்றும் டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.