திருவெறும்பூர் அருகே நடவுபணியில் இருந்த பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு

திருவெறும்பூர் அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2021-11-22 13:00 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெட்டுகாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 55). இவர் இன்று திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நடவு பணி செய்வதற்காக வேலைக்கு வந்துள்ளார்.

அப்படி வேலைக்கு வந்த அஞ்சம்மாள் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த அஞ்சம்மாள் மீது இடி, மின்னல் பலமாக தாக்கியது.இதில் சம்பவ இடத்திலேயே அஞ்சம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருநெடுங்களம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் கிளியூர் பகுதியில் நடவு பணியில் ஈடுபட்ட ஒரு பெண்மணியும் பத்தாளப்பேட்டை விவசாய வேலைக்கு வந்த வெளியூரை சேர்ந்த ஒரு முதியவரும்  மின்னல் தாக்கி ஒரே நாளில் பரிதாபமாக இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News