திருவெறும்பூர் அருகே நிலங்களை அளந்து பிரித்து கொடுக்கும் பணி தொடக்கம்
திருவெறும்பூர் அருகே நிலங்களை அளந்து பிரித்துக் கொடுக்கும் பணி தாசில்தார் தலைமையில் தொடங்கியது
திருச்சி, திருவெறும்பூர் அருகே 6 ஆண்டுகளுக்கு முன்பு வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் 63 பேருக்கு பட்டா வழங்கிய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் தற்போது அதற்கு உரிய நிலங்களை அளந்து பிரித்துக் கொடுக்கும் பணியை திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் மேற்கொண்டார்.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் வாழ வந்தான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், அம்பேத்கர் நகர், லூர்து நகர் ஆகிய பகுதிகளுக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த 30.09.2015 அன்று சுமார் 63 பேருக்கு 3 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்கபட்டது.
ஆனால் இது நாள் வரையில் அந்த இடங்களை நில வரைபடத்தில் பதிவு செய்யவோ, அடங்கலில் ஏற்றவோ இல்லை. பல முறை அதிகாரிகளை சந்தித்தும் எந்த நடவடிக்கை எடுக்க படாத நிலையில் கடந்த 5.ந்தேதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன், விவசாய சங்க தலைவர் சங்கிலிமுத்து வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் கட்சி கிளை செயலாளர் கருணாநிதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து முறையிட்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் மற்றும் 5 மாவட்ட சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு சர்வே எண் 262 , 263, 270 உள்ளடக்கிய நத்தம் நிலங்களை அளந்து பட்டா வழங்க சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மல்லிகா, கிளை செயலாளர் கருணாநிதி, விவசாய சங்க தலைவர் சங்கிலிமுத்து ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.