ஜே.இ.இ-ல் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு திருச்சி என்.ஐ.டி.யில் பாராட்டு
ஜே.இ.இ-ல் தேர்ச்சி பெற்ற மாணவர் அருண்குமாருக்கு திருச்சி என்.ஐ.டி.யில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி என்.ஐ.டி.யில் இயக்குனர் மினிஷாஜி தாமஸ் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
என்.ஐ.டி. எனப்படும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கற்பித்தல் குழுவான இக்நைட் பயிற்சியின் உதவியுடன் ஜே.இ.இ. மெய்ன் மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவனான அருண்குமாருக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.
இச்சாதனையை போற்றும் விதமாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அருண்குமாருடன் இக்நைட்டு க்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த யங் இந்தியன்ஸ் நிறுவனமும் , முந்தைய வருடம் இக்நைட்டின் உதவியுடன் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் சேர்ந்த சேதுபதி மற்றும் புகழரசி ஆகிய மாணவர்களும் , இக்நைட் உறுப்பினர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
இக்நைட் குழுவின் உறுப்பினர்கள் நுழைவு தேர்வுகளுக்குத் தேவைப்படும் தரமான கல்வியை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அதன் பயனாக கொரோனா ஊரடங்கு காலங்களிலும் பல அரசு பள்ளி மாணவர்கள் இக்நைட்டின் பயிற்சியின் காரணமாக இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த வெற்றி பயணம் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என நம்புகிறது இக்நைட்.
இந்நிகழ்வில் முதல்வர் (மாணவர் நலன்) டாக்டர். குமரேசன் , இக்நைட்டின் ஆசிரிய ஆலோசகர்கள் டாக்டர் மஞ்சுளா, முன்னாள் ஆசிரிய ஆலோசகர் டாக்டர் வெங்கட கிருதிகா , யங் இந்தியன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.