திருச்சி என்.ஐ.டி.யில் ஒரு வார கால சர்வதேச மகளிர் தினவிழா நாளை துவக்கம்
திருச்சி என்.ஐ.டி.யில் ஒரு வார கால சர்வதேச மகளிர் தினவிழா நாளை துவங்குகிறது. 10ம் தேதி விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கிறார்.
திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) நடைபெற உள்ள சர்வதேச மகளிர் தினவிழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கிறார்.
பெண்மையும், வன்மையும் கலந்த புதுமை தான் பெண்மை. அதனால் தான் சர்வமும் சக்திமயம் என்று சொல்லப்படுகிறது. மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை இந்த நாளின் நோக்கமாகும்.
கடந்த 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் ஊதிய பிரச்சினைக்காக பெண்கள் இணைந்து நடத்திய ஒரு போராட்டம் தான் சர்வதேச மகளிர் தினத்திற்கு ஊன்றப்பட்ட வித்தாகும். இதனை தொடர்ந்து கடந்த 1917ம் ஆண்டு ரஷியாவில் பெண் புரட்சியாளர்களின் ஒரு போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னரே உலக அளவில் மார்ச் மாதம் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி (என்.ஐ.டி. திருச்சி) 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு வார கொண்டாட்டத்தை மார்ச் 6, 2023 அன்று துவக்குகிறது. விழா திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு என்.ஐ.டி. திருச்சியில் உள்ள EEE ஆடிட்டோரியத்தில் நடைபெறும். லலிதா & ஷ்யாமளா நர்சிங் ஹோம் திருச்சியைச் சேர்ந்த புகழ்பெற்ற மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர். எஸ்.சித்ரா விழாவைத் தொடங்கி வைத்து, ‘பெண்கள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற தலைப்பில் வளாக சமூகத்தில் உரையாற்றுகிறார். விழாவிற்கு திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா தலைமை வகிக்கிறார்.
ஒரு வார கால கொண்டாட்டங்கள் விருந்தினர் விரிவுரைகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளால் நிரம்பியுள்ளன. மார்ச் 9 ஆம் தேதி திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஐ.பி.எ.ஸ். பெண்கள் மற்றும் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் வரும் மார்ச் 10ஆம் தேதி விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.என்.ஐ.டி. திருச்சியின் மகளிர் பிரிவு, டாக்டர் எஸ்.வேல்மதியின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.