தொடர்மழையால் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது

திருச்சி மாவட்டத்தில் தொடர்மழையால் நவல்பட்டு ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

Update: 2021-11-07 11:05 GMT

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதிகளான துவாக்குடி, பெல் நிறுவன வளாகம், சூரியூர், காந்தலூர், நவல்பட்டு, பூலாங்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வந்தது. தொடர் மழையால் இப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகர் பகுதி ஒன்றில் பெய்த கனமழையால் துப்பாக்கி தொழிற்சாலை வளாக பகுதிகளில் பெய்த மழைநீர் வரத்தாலும் அண்ணா நகர் பகுதி ஒன்றில் மீண்டும் மழை நீர் தேங்கி அப்பகுதியில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சில வீடுகளில் பாதாள சாக்கடை நீர் நிரம்பி அதிலிருந்து கழிவுகளும் வீட்டுக்குள் வந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அண்ணா நகர் அப்துல்கலாம் குடியிருப்போர் நலச்சங்க பொது செயலாளர் ராஜராஜன் கூறுகையில் 'எங்களுக்கு மழை நீர் தேங்கி தொடர்ந்து இதுமாதிரி கழிவுகள் வீட்டுக்குள் வந்து மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக துப்பாக்கி தொழிற்சாலை மழைநீர் வடிய ஏற்கனவே  வடிகால் வசதி செய்யப்பட்டு இருந்த அண்ணா நகர் சாலையில் மீண்டும் அந்த வழியாக பாலம் அமைத்து தர உடனடி நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பகுதிகளில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் யாரும் சென்று வர முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News