சேறும் சகதியுமான சாலையால் பள்ளிக்கு விடுமுறை விட பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் சேறும் சகதியுமான சாலையால் பள்ளிக்கு விடுமுறை விட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், வெங்கடேஸ்வரா நகர் பகுதி தெருக்கள் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பகுதியை சேர்ந்தது மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், வெங்கடேஸ்வர நகர், ராஜீவ் காந்தி நகர், காந்தி தெரு பகுதிகள். திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இந்த பகுதிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள அனைத்து தெருக்களிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் போடப்பட்ட நிலையில் இந்தப் பகுதி மட்டும் ஒதுக்கப்பட்ட பகுதியாக மாறிவிட்டது இந்தப் பகுதியில் கவுன்சிலரை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை. ஒரு மாநகராட்சி அதிகாரிகள் கூட இது வரை வந்ததில்லை.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் வெளியில் இருந்து வீட்டுக்குள் செல்ல முடியாமலும் தவித்து வருகிறார்கள்.
தெருக்களில் நடந்தே செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
எனவே சாலையை சரி செய்யும் வரை இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.