பா.ஜ.க. மாநில பொருளாளர் மீது தி.மு.க. ஐ.டி. குழு சார்பில் புகார்
பா.ஜ.க. மாநில பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.;
அண்மையில் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் புழுக்கள் இருந்தது சம்பந்தமாக செய்தி வெளியானது.
இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மீது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் என்பவர் சமூக வலைத்தளங்களில் சத்துணவு முட்டையில் புழுக்கள் விவகாரம் கோழி அதிகமாக புழுக்களை தின்றதால் ஏற்பட்டிருக்கலாம். இதேபோல் மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க மாண்புமிகு தளபதி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி என கூறி அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகைப்படத்தோடு இணைத்து வால் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பரப்பி விட்டிருந்தார்.
தி.மு.க. அரசிற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள எஸ்.ஆர்.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.