திருச்சியில் போலீஸ்காரரின் மனைவிக்கு கொலை மிரட்டல்
திருச்சியில் போலீஸ்காரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
திருச்சி மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் காத்துவன் என்பவரது செல்போனை காணவில்லை. அவர் தனது செல்போனை போலீஸ்காரரின் சகோதரர்தான் திருடி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்.
சம்பவத்தன்று காத்துவன், தனது நண்பரான அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து போலீஸ்காரரின் சகோதரருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ்காரர் மனைவியின் உடையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் இ.பி.கோ.294 (பி), 323, 506 (2) மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் காத்துவன், மணிகண்டன் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.