திருச்சியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார்.;
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் வசித்து வரும் முகுந்தன்-லட்சுமி ஆகியோரின் மகள் ஜீவிதா (வயது 20). திருச்சி ஈவேரா அரசு கல்லுாரியில் பிஎஸ்சி 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் வந்துள்ளது. இதற்காக மெடிக்கல்லில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் மேலும் அதிகமாகி உள்ளது.
இதன் காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு ஜீவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.