வாய்க்காலில் மூழ்கி சிறுவன் மாயம்: தேடும் பணியில் போலீசார் தீவிரம்
திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கி மாயமான சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி பகுதியில் கட்டளை வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் முழ்கி மாயமான மாணவனின் உடலை துவாக்குடி மற்றும் மாத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா காயாம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் திருச்சி என்ஐடி கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் ஹரிஷ் (வயது 15), அகிலன் (வயது 12). ஹரிஷ் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஹரிஷ், அகிலன் மற்றும் நண்பர்களுடன் பழங்கனாங்குடி பகுதியில் உள்ள கட்டளை வாய்க்காலில் நேற்று குளித்துள்ளனர். அப்போது ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதுகுறித்து அகிலன் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து பதறிப்போன பெற்றோர் மற்றும் பழங்கனாங்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் தண்ணீரில் இறங்கி ஹரிஷை தேடி பார்த்துள்ளனர். ஆனால் ஹரிஷ் உடல் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துவாக்குடி மற்றும் மாத்தூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டுள்ளனர். கட்டளை வாய்க்காலில் ஒரு கரை துவாக்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்டது. மற்றொரு கரை மாத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால் இரண்டு போலீசாரும் சிறுவன் ஹரிஷை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.