திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
திருச்சி திருவெறும்பூர் கட்டளை வாய்க்காலில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன் உடல் மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா காயாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ஹரிஷ். பதிநான்கு வயது ஹரீஷ் உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் நவல்பட்டு அருகே பழங்கனாங்குடி பகுதியில் உள்ள கட்டளை வாய்க்காலில் குளித்த போது தண்ணீரில் மூழ்கினான்.
அவனது உடலை திருவெறும்பூர் மற்றும் நவல்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் முகாமிட்டு பொதுப்பணித்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் பொதுமக்களுடன் இணைந்து தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 40 அடி ஆழமுள்ள குழுமிக்கு, வாய்க்காலில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் தேடி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
பின்னர் வாய்க்காலில் வரும் தண்ணீரை மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து வரத்து நீரை குறைத்தனர். அதைத்தொடர்ந்து சிறுவன் உடல் இன்று மீட்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.