திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-09-28 10:30 GMT
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது  செய்யப்பட்டனர்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகே உள்ள ஒரு மளிகை கடையிலும், அதன் எதிர்புறத்தில் உள்ள முட்புதரிலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்க ரயில்வே ஊழியர்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பணியாற்றக்கூடிய விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ஆர்வம் காட்டி வந்தனர்.

கேரள, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இந்த ஒரு இடத்தில் மட்டும் தினசரி சுமார் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்து திருச்சி பொன்மலை போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் இன்று சம்பவ இடத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகருக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையம், பொன்மலை காவல் நிலையம், மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையம் ஆகியவற்றின், எல்லையின் நடுவே இந்த இடம் அமைந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News