திருச்சியில் சம்பா சாகுபடிக்கு ரயிலில் வந்து இறங்கிய 1,320 டன் யூரியா
திருச்சியில் சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம் சுமார் 1,320 டன் இன்று காலை கூட்ஸ் ரயில் மூலம் வந்து இறங்கியது.
திருச்சி மாவட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு தேவையான யூரியா, பொட்டாஸ், டிஏபி உள்ளிட்ட பல்வேறு உரகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கடுமையான விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைக்காததோடு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு சரியாக கடன் வழங்கவில்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சீனாவிலிருந்து அந்திர மாநிலம் கங்காவரம் துறைமுகத்திற்கு வந்த யூரியா உரம் நேற்று கூட்ஸ் ரயில் மூலம் சுமார் 1,320 டன் யூரியா உரம் திருச்சிக்கு வந்து இறங்கியுள்ளது.
இதில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 650 முதல் 700 டன் வரை கிடைக்கும் என்றும் இந்த யூரியா உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் இந்த உரத்தை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் பயன் அடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிக யூரியாவை பயன்படுத்தினால் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால் யூரியாவை குறைத்து பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறையினர் விவசாயிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யூரியா தவிர மற்ற உரங்கள் வராதது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் உரங்களின் விலை உயர்வும், கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாலும் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.