ஸ்ரீரங்கம் கோவிலில் ஓலைச்சுவடிகள் ஆவணப்படுத்தும் பணிகள் துவக்கம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஓலைச்சுவடிகள் ஆவணப்படுத்தும் பணிகள் துவங்கியது
_108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் ஸ்தல வரலாறு, விழாக்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
பழங்கால ஓலைச் சுவடிகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பழமை வாய்ந்த அந்த ஓலைச்சுவடிகளை கணினியில் ஆவணப்படுத்தும் பணிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் இருந்து ஓலைச்சுவடிகள் ஒன்றொன்றாக பாதுகாப்பான முறையில் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் தனித்தனியே புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.