திருச்சியில் அடிதடி தகராறு: இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு

திருச்சியில் அடிதடி தகராறு காரணமாக இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-12 13:00 GMT

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறை கடைவீதியில் சனிகிழமை தோறும் வாரசந்தை நடைபெறும். இந்த வாரசந்தையில் முருகன் (வயது 36) என்பவர் எலுமிச்சை பழம் கடை வைத்திருந்தார். அப்போது அவருடைய கடை முன்பு பெட்டவாய்த்தலை அருகில் உள்ள எஸ். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கமலா நேரு (வயது 36), மற்றும் அவரது மகள் ஜான்பிரியா (வயது 20) ஆகிய இருவரும் தாங்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளை எலுமிச்சை பழம் கடை வைத்திருந்த முருகன் கடை முன்பு நிறுத்தியுள்ளனர்.

அப்போது முருகன் கடை முன்பு வாகனத்தை நிறுத்த வேண்டாம் வியாபாரம் பாதிக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கடை வைத்திருந்தவருக்கும், மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எலமனூரில் உள்ள தன்னுடைய மகன் அன்புதுரைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். உடனடியாக தன்னுடைய  நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து அடிதடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முருகன் (வயது 36) மற்றும் சரவணமூர்த்தி (வயது 48) ஆகியோர் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கமலா நேரு (36), அவருடைய மகள் ஜான்பிரியா (20), சகோதரர் அன்புதுரை (18), எலமனூரை சேர்ந்த தியாகராஜன் (20), விக்னேஷ் (22) உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து ஜீயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதே போல் கமலாநேரு கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகன் (36), சரவணமூர்த்தி (48) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News