திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன்:3-ம் நாளாக தேடும் பணி தீவிரம்

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனை மூன்று நாட்களாக தேடியும் கிடைக்காததால் பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Update: 2021-09-21 16:15 GMT

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன்

திருச்சி வரகனேரி அனந்தபுரத்தைச் சேர்ந்த நாக லிங்கம் மகன் ஸ்ரீராம் (வயது 18), இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வரகனேரி பகுதியில் நடைபெற்ற ஒரு இறுதி சடங்கில்  பங்கேற்றுள்ளனர். பின்னர் காவிரி ஆற்றில் ஓயாமரி அருகே உள்ள தில்லைநாயகம் படித்துறையில் ஆற்றின் உள்ளே குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராம் ஆற்றில் டைவ் அடித்து குளித்ததாக கூறப்படுகிறது.

இதில் அவர் தண்ணீரில் மூழ்கியதில் சிறிது தூரம் சென்று கையை மட்டும் ஆட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் போலீசார் உடனடியாக ஸ்ரீராமை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் சிறிது நேரத்திலேயே இருட்டி விட்டதால்  தேடும் பணியை நிறுத்தினர். இந்நிலையில்   ேநற்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகு தூரம் தேடியும் நேற்றும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் மாலை வரை தேடியும் ஸ்ரீராம் உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ கிடைக்கவில்லை.

இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீராம் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News