அடிப்படை வசதிகள் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பிய மாணவர்கள்
திருச்சி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சருக்கு மாணவர்கள் மனு அனுப்பினர்.;
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கல்வித்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் ஆகியோருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வனப்பகுதியில் குடிசைகள் அமைத்து வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் அத்தியாவசிய தேவையான மின்சார வசதி என எதுவும் இல்லாமல் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றோம்.
இதனால் நாங்கள் முறையாக கல்வி பயில முடியவில்லை. மின்சார வசதி இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. இரவு நேரங்களில் கொசு மற்றும் பூச்சி கடிப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். வருகிற ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணிக்க இருக்கிறோம். பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு, விவசாய கூலி வேலைகளுக்குச் செல்ல இருக்கிறோம்' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.