ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொக்க பனை முகூர்த்தக்கால் நடும் வைபவம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை சொக்க பனை திருவிழாவையொட்டி இன்று முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 21 கோபுரங்கள் மற்றும் 54 சன்னதிகளுடன் 108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது.
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நாட்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் மிக முக்கியமானது வைகுந்த ஏகாதசி பெருந்திரு விழாவாகும். இதுதவிர சித்திரை தேரோட்டம், பங்குனி தேரோட்டம் மற்றும் திருக்கார்த்திகை தீப விழா ஆகியவையும் நடத்தப்படுவது உண்டு.
அந்த வகையில் வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றும் திருவிழா நடைபெற உள்ளது. அப்போது உற்சவர் நம்பெருமாள் சொக்கபனை கண்டருள்வார்.
இதற்காக கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று காலை 10.30 மணி அளவில் கோயில் வளாகத்தின் கார்த்திகை கோபுரம் அருகில் சொக்கப்பனை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் உதவி ஆணையர் கந்தசாமி, உள் துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கோயில் மேலாளர் உமா மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ராட்சத முகூர்த்தகால் பணியாளர்கள் உதவியுடனும் கோவில் யானைகள் ஆசீர்வாதத்துடனும் நடப்பட்டு மேளதாளம் முழங்க பட்டர்களால் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.