ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்: பகல்பத்து 8-ஆம் நாள் விழா
வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து 8-ஆம் நாளான இன்று முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.;
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து வைபோகத்தின் முதல் நாளான (04.12.2021) அன்று, உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
அதே போல அலங்கார பிரியரான நம்பெருமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதைதொடர்ந்து பகல் பத்து 8-ஆம் நாளான இன்று (11.12.2021) நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், இரத்தின மகர ஹண்டிகை, முத்துச்சரம், அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.