திருச்சியில் கட்டைப்பைக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
திருச்சி ராம்ஜிநகர் அருகே கட்டைப்பைக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ராம்ஜிநகர் அருகே உள்ள வண்ணாங்கோவிலில் தனியார் நிறுவனத்தின் கிடங்குகள் உள்ளன. லாரிகளில் சரக்குகளை கொண்டு வந்து இங்கு இறக்கப்படுவது வழக்கம்.
வழக்கம் போல ஒரு லாரி டிரைவர் சரக்குகளை இறக்கி விட்டு சர்வீஸ் சாலையில் உள்ள பஸ்ஸ்டாப் அருகே லாரியை கொண்டு சென்று நிறுத்தி உள்ளார். அப்போது பஸ்ஸ்டாப்பில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று அவர் பார்த்த போது பஸ்ஸ்டாபில் கிடந்த கட்டை பையில் இருந்து சத்தம் வந்துள்ளது. அதனை திறந்து பார்த்த போது பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை அந்த கட்டைப்பையில் இருந்துள்ளது.
உடனடியாக லாரி டிரைவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திகேயன், மருத்துவ டெக்னீசியன் விஜி ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்த பச்சிளங்குழந்தையை அனாதையாக போட்டு சென்ற குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.