திருச்சி முக்கொம்பு மேலணை மதகில் பழுதடைந்த ராட்சத செயின்கள் மாற்றம்
திருச்சி முக்கொம்பு மேலணை மதகுகளில் பழுதடைந்த ராட்சத செயின்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் முக்கொம்பு மிக முக்கியமானதாக உள்ளது. இங்கு காவிரியில் இருந்து வரும் தண்ணீர் மழை காலங்களில் விவசாய நிலங்கள், திருச்சி மாநகர் பாதிக்கப்படாமல் இருக்க மேலணை கட்டப்பட்டு, அந்த தண்ணீரை தடுத்து காவிரி, கொள்ளிடம் என இரண்டு ஆறுகளாக பிரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த முக்கொம்பு சுற்றுலா மையத்தில் உள்ள காவிரி மேலணையில் உள்ள 4 மற்றும் 15 வது மதகை ஏற்றி இறக்கக்கூடிய ராட்சத செயின் பாதிப்படைந்தது. இருப்பினும் அவ்வப்போது மேலணையில் உள்ள மதகுகள் மற்றும் அவற்றை ஏற்றி, இறக்கக்கூடிய ராட்சத செயின்களை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக கடந்த ஆண்டு பழுதடைந்த ராட்சத செயினை மாற்றி அமைக்கும் பணி தற்போது நடைபெற்றது. அப்போது மேலணை மதகுகளில் பழைய செயின்களை எடுத்து விட்டு அதற்கு பதிலாக ஒரு மதகிற்கு 8 மீட்டர் (இருபுறமும்) வீதம், 2 மதகிற்கு மொத்தம் நான்கு புறம் 36 மீட்டர் புதிய ராட்சத செயின் பொருத்தப்பட்டது.
புதியதாக பொருத்தப்பட்ட அந்த செயினுக்கு ஆயில் விட்டு சரி பார்த்தனர். புதிய செயின் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.