திருச்சி அருகே தனியார் நிறுவன ஊழியர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், ஓலையூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல லட்சம் வருமானம் கிடைக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதை நம்பி ராஜ்குமார் ஓலையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமானோரை அந்நிறுவனத்தில் முதலீட்டாளராக சேர்த்து விட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி முதலீடு செய்தவர்களுக்கு உரிய தொகை கொடுக்க வில்லை என்றும், இதனால் பணம் கட்டியவர்கள் ராஜ்குமாரிடம் சென்று பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ராஜ்குமார் நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.