திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு
கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜீயபுரம் அருகே உள்ள அல்லூரில் கடந்த 2-ந்தேதியன்று சிவன் கோவில் வளாகத்தில் ஊராட்சிமன்றத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அந்த கிராம சபை கூட்டத்தில் அல்லூர் மேலபச்சேரியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கேள்வி கேட்கும் போது, ஊராட்சி மன்ற தலைவர் உனக்கு ஏன் பதில் கூற வேண்டும்?உனக்கு கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு? என்றும், மேலும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 10-ந்தேதி தனது மனைவியுடன் காரில் செல்லும் போது காரை வழி மறித்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஆனந்த் என்பவர் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விஜயேந்திரன் (வயது 49),அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், மணிகண்டன், பாரத், விக்ரம்(எ) வீரப்பன் ஆகியோர் மீது ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சுப்பையா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.