வீடு தேடி மருத்துவம் தி்ட்டத்தில் ஒரு கோடியே ஒன்றாவது நபருக்கு மருந்து
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது நபருக்கு இன்று மருந்துகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்தாண்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் துவங்கப்பட்டது. வீடுகளுக்கு சென்று மருத்துவர்கள் உடல்நிலை பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, இயன்முறை மருத்துவம், சர்க்கரை நோய் பரிசோதனை என இவைகளை மேற்கொண்டு இரண்டு மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை அரசு சார்பில் வழங்கப்பட்டு அவர்களை தொடர் கண்காணிப்பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது நபருக்கான மருந்து மாத்திரைகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாங சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஒரு முதியவரின் உடல் நிலையை விசாரித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவம் பற்றி கேட்டறிந்தார்.
இவ்விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கடந்தாண்டு கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் 50,000 பயனாளிகளை சிட்லபாக்கத்தில் நடந்த விழாவில் முதல்வர் கலந்து கொண்டு மருந்துகளையும் 75 ஆயிரம் பயனாளிகள் எட்டிய நிலையில் நாமக்கல்லில் 80 ஆயிரம் பயனாளிகள் சென்னையிலும் 90 ஆயிரம் பயனாளிகள் அடைந்தபோது விருகம்பாக்கத்திலும் தற்போது ஒரு கோடியே ஒன்றாவது நபர் பயனடையும் நிலையில் அவர்களுக்கு வீடு தேடி சென்று மருந்துகளை நம்முடைய தமிழக முதல்வர் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று தமிழக முதல்வர் மருத்துவ துறை சார்பில் ஆறு மாவட்டங்களில் கட்டப்பட்ட ரூபாய் 12 கோடியே 38 லட்சம் மதிப்பிலான ஏழு கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டுபிடிக்கும் டெலி கோபோல்ட் கருவியும் தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சி. சி.டி. ஸ்கேன் இயந்திரத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
வரும் 2025 க்குள் தமிழ்நாட்டில் காச நோய் மற்றும் தோல் நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கும் நோக்கில் 40 கருவிகள் ரூபாய் 11 கோடியே 67 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 26 ஆயிரத்து 335 பணியாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளக்கூடிய பி.பி. அப்பாரேட்டஸ் வழங்கப்பட உள்ளது எனவும் நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டுவைகளை இதன் மூலம் துல்லியமாக கணக்கிடலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் முதல் முறையாக ரத்த சோகையை கண்டுபிடிக்கும் 245 கருவிகள் இத்துறை பணியாளரிடம் இன்று முதல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தற்போது அவர்கள் ஊதியம் 500 இல் இருந்து ஆயிரம் வரை உயர்த்தி வழங்க முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளார் இதற்காக தமிழக அரசுக்கு 23 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகிறது.
மருத்துவ சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்கி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக திருச்சியில் உள்ள மணிகண்டம் எல்லைக்குட்பட்ட 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச் சான்றிதழ்கள் பெற்ற நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது போன்று சாமானிய மக்களுக்கான மருத்துவம் கிடைக்கும் வகையில் எண்ணற்ற புதிய திட்டங்கள் மருத்துவத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதியாக உள்ளதும் சாமானிய மக்களின் உழைப்பாளர் நமது முதல்வர் எனவும் தெரிவித்தார்.