விபத்து அபாயத்தில் ஜீயபுரம் பஸ் நிறுத்தம்- போலீஸ் எஸ்.பி.க்கு மனு
விபத்து அபாயத்தில் திருச்சி ஜீயபுரம் பஸ் நிறுத்தம் பகுதி இருப்பதால் பாதுகாப்புகோரி எஸ்.பி.க்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜீயபுரம் பஸ் நிறுத்தத்தில் சாலை பாதுகாப்பை உறுதி படுத்த கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான திருச்சி-கரூர் சாலையில் ஜீயபுரம் பஸ் நிறுத்தம் பகுதி மூன்று சாலைகள் இணைப்பு சாலையாக உள்ளது. இப்பகுதியில் பல்துறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ரயில் நிலையங்கள், நிறைந்த பகுதியாகவும் உள்ளது.
தினந்தோறும் இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில், தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள முக்கிய பகுதியாகும்.
அகலம் குறைவான இந்த பகுதியில் திருச்சி-கரூர் சாலையில் நடுவில் சென்டர் மீடியனும் குழுமணி பிரிவு சாலையில் சென்டர் மீடியனும் அமைக்கப்பட்டுள்ளது. குழுமணி பிரிவு சாலையில் வாகனங்கள் திரும்பும் போது,கரூர் சாலையில் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் சென்டர் மீடியன் பகுதியில் இரண்டு புறமும் பேருந்து நிறுத்தம் உள்ள படியால் பேருந்துகள் நின்று செல்லும் போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எதிர், எதிர் திசையில் விதிகளை மீறிச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் சென்டர் மீடியன் இரு புறமும் வாகனங்களும்,பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் நின்று கொண்டிருப்பதால், இந்த சாலையில் சென்டர் மீடியனின் ஒரு புறம் வணிக வளாகங்கள் உள்ளபடியால் அதற்காக வரும் பொதுமக்களும் அவரவர் வாகனங்களை சாலை ஒரத்தில் நிறுத்துவது பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.
இப்பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்களால் சென்டர் மீடியன் கட்டையில் வாகனங்கள் இடித்து விபத்து ஏற்படுவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்துக் காவலரை பணியில் நியமித்தும், பல மாதங்களாக காலியாக உள்ள ஜீயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணி இடத்தை நியமித்து பொது மக்களின் நலன் காக்க வேண்டும் என்றும்.
எங்களுடைய மனுவினை பரிசீலனை செய்து தக்க அலுவலரை நியமித்து இப்பகுதியில் கள ஆய்வும், துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை செய்தும் இப்பகுதியில் சாலை கட்டமைப்புகளை நிறுவி ஜீயபுரம் பஸ் நிறுத்தம் சென்டர் மீடியன் பகுதியில் சாலை பாதுகாப்பையும் உயிர் பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.