திருச்சி திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனையகம் செயல்பாட்டுக்கு வந்தது
முதல் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனையகம் செயல்பாட்டுக்கு வந்தது.;
காய்கறிகள், பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பேரங்காடிகள் தொடங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படை யில் திருச்சி திருவானைக்காவல் டிரங்ரோட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தோட்டக்கலை விற்பனையகம் என்ற பெயரில் பேரங்காடி அமைக்கப்பட்டது. இந்த விற்பனையகத்தை கடந்த 30-ந்தேதி நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அன்று முதல் இந்த விற்பனையகம் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, இங்கு திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்தும், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 63 தோட்டங்களில் இருந்தும் பெறப்படும் அனைத்து வகையான நாட்டு காய்கறிகள், ஊட்டி காய்கறிகள், பழங்கள், மலர்கள், மாடித்தோட்டத்துக்கான இடுபொருட்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, வையம்பட்டி, மணிகண்டம் ஆகிய 6 இடங்களில் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டு விவசாய குழுக்கள் மூலம் இங்கு தினமும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இந்த மையத்தில் 15 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு வசதியும் உள்ளது என்றனர்.