மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் வாரிசுக்கு எம்.எல்.ஏ.நிவாரண உதவி
ஸ்ரீரங்கம் தொகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை எம்.எல்.ஏ, பழனியாண்டி வழங்கினார்.
திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி வசந்தா. இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் இயற்கை உபாதைக்கு சென்ற போது இருள் சூழ்ந்த பகுதியில் மின்கம்பிகள் அறுந்து கிடந்ததை தெரியாமல் மிதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்த போன வசந்தாவின் குடும்ப வாரிசுக்கு மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி வசந்தாவின் குடும்ப வாரிசுதாரர்களிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உதவி செயற்பொறியாளர் கலைவாணன், உதவி பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.