அதிமுக எம்.எல்.ஏ. காரில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காரில் எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

Update: 2021-03-22 20:05 GMT

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காரில் எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.

திருச்சி ஸ்ரீரங்கம், பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முசிறி தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய அ.தி.மு.க வேட்பாளருமாகிய  செல்வராஜ் காரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்தகாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த காரை சிவக்குமார் என்பவர் ஓட்டி வர முசிறி அ.தி.மு.க வின் 11 வது கிளை செயலாளர் சத்யராஜ், அ.தி.மு.க உறுப்பினர் ரவி,bஎம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இருந்துள்ளனர். இதனை அடுத்து பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் இது குறித்து ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் நிஷாந்த் கிருஷ்ணாவிற்கு தகவல் அளித்து அந்த பணம் மற்றும் காரை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டு அது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த வருமான வரித்துறையினர் காரில் பயணித்த அ.தி.மு.க வினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பணம் காரில் இருந்தது தங்களுக்கு தெரியாது என காரில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். முசிறி தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான செல்வராஜ் மீண்டும் அதே தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான காரில் பணம் எடுத்து செல்லப்பட்டது, தேர்தலுக்காக பணப்பட்டுவாடா செய்யவே எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது அதிகாரிகள் மற்றும் மற்ற கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News