மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்
திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்ட கலெக்டரின் சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் மணிகண்டம் அருகே உள்ள கோலார் பட்டி, துறைகுடி, முள்ளிப்பட்டி, திருமலைசமுத்திரம் ஆகிய ஊர்களை ஒட்டியுள்ள கோரையாறுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முள்ளிப்பட்டி அருகே உள்ள கோரையாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த டிப்பர் லாரி, சரக்கு ஆட்டோ, மாட்டுவண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிப்பர் லாரி டிரைவர் நாகமங்கலம், தீரன்மாநகரை சேர்ந்த நடராஜன் (வயது 51), சரக்கு ஆட்டோ டிரைவர் முள்ளிப்பட்டி அய்யாதுரை மகன் ஆனந்தராஜ் (30), மாட்டு வண்டி உரிமையாளர் முள்ளிப்பட்டி செல்லன் மகன் முத்துச்செல்வன் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுடன் மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் 3 பேரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் டிப்பர் லாரி உரிமையாளர் மணிகண்டம் அருகே உள்ள கும்பகுறிச்சி கண்ணன் மனைவி ருக்மணி (24) என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.