திருச்சி அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலை கண்டு பிடிப்பு
திருச்சி அருகே இயங்கி வந்த போலி மதுபான ஆலையை போலீசார் கண்டு பிடித்து 5 பேரை கைது செய்தனர்.;
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ளது யாகப்புடையான்பட்டி. இங்கு போலி மதுபான ஆலை ஒன்று இயங்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த கிராமத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 1900 மதுபான பாட்டில்கள் மற்றும் மூன்று பேரலில் இருந்த போலி மதுபான ஊறல்களை போலீசார் கைப்பற்றினர் .இதுதவிர மது பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், நிறுவனங்களின் போலி லேபிள்கள், மூடிகள் ஆகியவையும் இருந்தது. அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தவிர பாட்டில்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். போலி மதுபான ஆலையை நடத்தி வந்த ஐந்து போரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் போலி மதுபான ஆலை விவகாரம் தொடர்பாக திருவேறும்பூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராபாய், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகிய இருவரையும் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.சரவண சுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.