திருச்சி திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயிலில் ஐப்பசி துலா முழுக்கு

திருச்சி திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயிலில் ஐப்பசி துலா முழுக்கு நிகழ்ச்சி தீர்த்தவாரியின்றி நடைபெற்றது.

Update: 2021-10-18 12:15 GMT

திருச்சி திருப்பராய்த்துறை கோயிலில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் உள்ளனர்.

திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில்  அமைந்துள்ள பசும்பொன்மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதலாம் நாள் புகழ்பெற்ற துலாமுழுக்கு (துலாஸ்நானம் ) நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பத்தர்கள் வருவார்கள். இதில் கலந்து கொண்டு அகண்ட காவிரியில் புனித நீராடுவார்கள். இதனால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடை பெறாமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் இன்று அதிகாலை 4 மணிக்கு ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பட்டையதாரர்கள் அகண்ட காவிரி யாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்திலேயே அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் புனித நீரை எடுத்து கொண்டு காவிரி ஆற்றில் கலந்தனர்.

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவர் மற்றும் தனி அம்மனை பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சுதர்சன் ஆலோசனையில் பேரில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் ராகினி, தக்கார் விஜய் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியினை ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News