கொரோனா தடுப்பூசி: குலுக்கல் முறையில் 20 பேருக்கு புடவைகள் பரிசு

சிறுகமணியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 20 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2021-10-12 15:30 GMT
சிறுகமணி பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு செயல் அலுவலர் நளாயினி புடவை பரிசு வழங்கினார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களிடம் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் வகையில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சார்பில் பரிசுத் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி அருகே உள்ள சிறுகமணி பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் புடவை பரிசு வழங்கப்படுமென பேரூராட்சி செயல் அலுவலர் நளாயினி அறிவித்திருந்தார்.

சிறுகமணி பேரூராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அப்படி தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 20 நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நளாயினி புடவைகளை பரிசாக வழங்கினார். உடன் தலைமை எழுத்தர் மணிகண்டன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.

Tags: