திருச்சி ராம்ஜிநகரில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
திருச்சி ராம்ஜிநகரில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸ்சூப்பிரண்டு மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மூர்த்தி உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர், ராம்ஜிநகர் அரிபாஸ்கர் காலனி, நியூ காட்டூர் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதில், சுமார் - 4.5 கிலோ சட்டவிரோத கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை வைத்திருந்த மதன் என்கிற மதன்மித்ரன் மற்றும் 3 ஆண்கள், 4-பெண்கள் என மொத்தம் 8 நபர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும், இதுபோன்ற சட்டவிரோத செய்கைகளான மணல் திருட்டு, லாட்டரி விற்பனை, சூதாட்டம், மற்றும் சில்லறை மதுவிற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.