3 மகன்களை ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்க்கு அ.தி.மு.க. பாராட்டு
திருச்சி அருகே 3 மகன்களை ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்க்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எரங்குடி என்ற சிற்றூர். இந்த ஊரில் உள்ள ராஜு -மயிலாம்பாள் தம்பதியினர் பற்றி இன்று நாடே பேசுகிறது.
அதற்கு காரணம் இந்த தம்பதியர்களுக்கு பிறந்த ஐந்து மகன்களில் மூன்று பேரை இந்திய ராணுவத்திற்கு அனுப்பியது தான். மூன்று மகன்களை நாட்டின் பாதுகாப்பு பணிக்காக ராணுவத்திற்கு தாரைவார்த்த மயிலாம்பாளின் வீரத்தைப் பாராட்டி மத்திய அரசு ஏற்கனவே அவருக்கு 'வீரத்தாய்' விருது வழங்கி கவுரவித்து உள்ளது.அந்த ஊரில் யாரைக் கேட்டாலும் இது 'மிலிட்டரி வீடு' என்று அடையாளம் காட்டும் அளவிற்கு அவர்களது குடும்பம் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் வயது முதிர்வின் காரணமாக ராஜு இறந்துவிட இந்த தம்பதியினரின் மூத்த மகனான பொன்னுசாமி 19 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
இந்த சோகம் அந்த தாயின் மனதில் இருந்து நீங்குவதற்குள் அடுத்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. கடந்த 7ஆம் தேதி மூன்றாவது மகனான கோபால் செகந்திராபாத்தில் இருந்து பயிற்சிக்கு சென்ற இடத்தில் திடீரென காணாமல் போய் விட்டார் என்பதுதான், அந்த தகவல். ராஜு-மயிலாம்பாள் தம்பதியினரின் இன்னொரு மகனான சேகர் 20 ஆண்டுகள் ராணுவ பணி முடித்து இரண்டு மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்துள்ளார்.
ஒரு மகன் நாட்டின் பாதுகாப்பு பணியில் மரணத்தை தழுவ இன்னொரு மகன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் எங்கே? என்ற தகவல் கூட தெரிய முடியாமல் தவித்து வரும் அந்த தாயின் சோகத்தை அறிந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி நேற்று அவரது இல்லத்திற்கு சென்று சால்வை அணிவித்து கௌரவித்து ஆறுதல் கூறி இருக்கிறார். அப்போது அவருடன் மணிகண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்கருப்பன் மற்றும் அற்புதம் ஆகியோர் சென்றிருந்தனர்.
தனது மகனின் நிலை என்ன என்று கூட அறிய முடியாத குக்கிராமத்தில் தவித்து வரும் அந்த தாயின் சோகத்தை போக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.