திருச்சியில் 132 கிலோ கஞ்சா பறிமுதல்: லாரியுடன் இருவர் கைது

ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 132 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-23 04:45 GMT
திருச்சியில் லாரியில்  கஞ்சா கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு பரத் சீனிவாசன் மேற்பார்வையில் திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையிலான போலீசார் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்பிளாசா அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக நெல்லை மாவட்ட பதிவு எண் கொண்ட ஒரு லாரி வந்தது. அதை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 6 மூட்டைகள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்த போது அதில் 132 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே லாரியில் இருந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தேனியைச் சேர்ந்த மூவேந்திரன் (வயது 28), கரூரை சேர்ந்த பிரபு (வயது 39) என்பதும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த ஆறு மூட்டைகளில் இருந்த கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியையும், அதிலிருந்த 132 கிலோ அளவிலான  கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூவேந்திரன், பிரபு ஆகிய இருவரையும்  போலீசார் கைது செய்தனர்.பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News