திருச்சியில் விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு மண்டை உடைப்பு
திருச்சி பிராட்டியூர் பகுதியில் விசாரணைக்கு சென்ற போலீசாரின் மண்டையை போதை ஆசாமி அடித்து உடைத்தார்.
திருச்சி மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100க்கு பிராட்டியூர் ஆலங்குளம் பகுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று இன்று நள்ளிரவு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் வீட்டின் முன்னால் ஒருவர் தகராறு செய்து கொண்டிருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய எஸ்எஸ்ஐ ஜவஹர் மற்றும் டிரைவர் ஜோன் ஜோசப் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கே ஒரு வீட்டின் முன் பாலமுருகன் என்பவர் உடல் முழுக்க எண்ணை தேய்த்து நிலையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அவரை கண்டித்து அமைதிப்படுத்துவதற்கு இருவரும் முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அவர் தான் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் இருவரையும் தாக்கியுள்ளார்.
இதில் எஸ்எஸ்ஐ ஜவகர், டிரைவர் ஜோன் ஜோசப் ஆகியோரின் மண்டை உடைந்து உள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.