குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு;
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் சாலை பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதனால் அடிக்கடி அங்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் விநியோகம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே உடனடியாக தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும், சாலை பணியின் போது குடி நீர் குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் கவனமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசம்பேட்டை பகுதியில் அப்பகுதி மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.