ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தை தேரோட்டம்

Update: 2021-01-27 10:00 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டம் நடைபெற்றது. கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர்திருவிழாவையொட்டி கடந்த 18ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதே சமயம் முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனித நீர் தெளிக்கப்பட்டது.தைத் தேர் திருவிழாவின் முதல் நாளான 19ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி அதிகாலை 5.15 மணிக்கு தை தேர் மண்டபத்தை சென்றடைந்தார். 5.15 மணியில் இருந்து 5.45 மணிக்குள் நம்பெருமாள் தேரில் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேரை இழுத்தனர். கொரோனா தடை உத்தரவுக்கு பிறகு நடைபெறும் முதல் திருத்தேர் வைபவம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா, ரெங்கா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News