பொதுமக்கள் தாக்கியதில் திருட வந்த வாலிபர் பலி: திருச்சியில் பரபரப்பு

Update: 2020-12-26 06:21 GMT

திருச்சியில் திருட முயன்ற கேரள வாலிபர்களை விரட்டி பிடித்து பொதுமக்கள் தாக்கியதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜீயபுரம் அருகே அல்லூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது வீட்டில் நேற்று இரண்டு திருடர்கள் சுவர் ஏறி குதித்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்து குரல் எழுப்பியுள்ளார்.அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அப்பகுதிக்கு வந்து திருடர்கள் இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரில் ஒருவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் கத்தியை தட்டிவிட்டு அவனை பிடித்து தாக்கி உள்ளனர்.இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்து இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்த திருடனை அங்கிருந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். போலீசார் திருட வந்த மற்றொரு நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதில் இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்த தீபு ( 25) என்கிற அந்த இளைஞன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு திருடன் அவனது நண்பனான கேரளாவை சேர்ந்த அரவிந்த் ( 24) என்பதும் தெரியவந்தது.

இதனிடையே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News