ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு - கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை
வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் பரமபத வாசல்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு - கொரோனா காரணமாக பரமபதவாசல் திறப்பை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாக போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் பத்து நிகழ்வின் பத்தாம் நாளான நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.இராப்பத்து நிகழ்வின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.அதற்கு முன்னதாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து செர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றடைந்தார். பரமபத வாசல் திறக்கப்பட்ட உடன் பரமபதவாசலை கடந்த நம்பெருமாள் அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.கொரோனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.நம்பெருமால் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு நம்பெருமாளை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பெரிய விழாவான சொர்க்கவாசல் திறப்பில் வருடா வருடம் தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக சொர்க்கவாசல் திறப்பை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.இந்த விழாவிற்க்காக சுமார் 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.