தொட்டியம் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்திய பெண்கள் மயக்கம்

தொட்டியம் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-01-06 08:25 GMT

தொட்டியம் போலீஸ் நிலையம் முன் தர்ணா போராட்டம் நடத்திய பெண்கள்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாவதி. தொட்டியம் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரீத்தி. இவர்களின் உறவினருக்கும், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதன் பேரில், முசிறி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில், புகார் குறித்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்திருந்தனர். இதில் ஹேமாவதி மற்றும் பிரீத்தி தரப்பினர் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு  வந்தனர். ஆனால் மாலை வரை இது தொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், தங்களை அழைத்து அவமானப்படுத்தியதாக கூறி ஹேமாவதி, பிரீத்தி உள்ளிட்ட 3 பேர் போலீஸ் நிலைய வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம், எங்களை ஏன் கேவலமாக நடத்துகிறீர்கள் என கேட்டு ஹேமாவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காலை, மதியம் சாப்பிடாததால் அவர் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து தொட்டியம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News