கொல்லிமலை உபரி நீரை ஏரிகளுக்கு திருப்பி விட கோரும் கிராம மக்கள்
கொல்லிமலை உபரி நீரை ஏரிகளுக்கு திருப்பி விட வேண்டும் என கோரும் கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.;
ஏரிக்குள் நின்று நூதன போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருந்திய மலை பகுதியில் உள்ள பல ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு போய் கிடக்கின்றன.இந்த ஏரிகளில் கொல்லிமலையில் இருந்து வரக்கூடிய உபரி நீரை திருப்பி விட்டால் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். ஆனால் பல முறை அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் கொல்லிமலை உபரி நீரை விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் வழங்க கோரி இப்பகுதி மக்கள் நூாதன போராட்டம் நடத்தினார்கள். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி ஏரிக்குள் நின்று போராட்டம் நடத்தினார்கள்.
சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி பிடித்தபடி முதல்வரின் பிறந்தநாள் பரிசாக இதனை அறிவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.
150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு பல வருடங்களாக நீரின்றி வறண்டு கிடக்கின்றது. ஏரிக்கு நீர் வழங்குவதால் ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள் என்று அப்போது அவர்கள் கூறினார்கள்.
சமூக ஆர்வலர் லோகநாதன் ,மணிகண்டன், தியாகராஜன், விக்னேஷ், லோகநாதன் என்சிசி மாணவர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் மற்றும் பொன்னாங்கண்ணி பட்டி கிராம மக்கள் திருந்தியமலை கிராம மக்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர். முதல்வரின் பிறந்த நாளில் இவர்கள் ஏரிக்குள் நின்று கோரிக்கை வைத்து நூதன போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.