தொட்டியம் அருகே பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா
தொட்டியம் அருகே பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் பசுமை மக்கள் இயக்கத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா 2022 இரண்டு நாட்கள் நடைபெற்றது. தண்ணீர்அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கவிஞர் கி. சதீஷ்குமார், தண்ணீர் அமைப்பின் நிர்வாக குழு ஆர்.கே.ராஜா, மற்றும் நொச்சியம்ஆனந்த், மணச்சநல்லூர் கலைவாணன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சமூக ஆர்வலர் , சூழலியாளர் , கோவை சதாசிவம் கலந்து கொண்டு பாரம்பரியம் மிக்க நமது உணவு முறைகளை பற்றி பேசினர்.
அவர்கள் பேசும்போது பண்டை தமிழர்களின் உணவுமுறை அவர்களின் வாழ்வியலோடு ஒன்றென கலந்திருந்தது. "உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும்" வாழ்ந்தார்கள். உணவு முறையிலும் உயரிய கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி இருந்தது. கிடைத்ததை, கிடைத்த நேரத்தில் சாப்பிடுகிற வழக்கமோ, சுவையை அடிப்படையாக கொண்டதோ அல்ல. ஒவ்வொரு உணவு முறையின் பின்னும் பல்வேறு அறிவியல் ரீதியான காரணங்கள் புதைந்திருக்கின்றன.
உணவு என்பது மூன்று முறை மட்டுமே உட்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் கேழ்வரகு, சாமை, கொள்ளு, அவரைக்காய் ஆகிய இந்நான்கும் அவர்களின் பிரதான உணவாக இருந்ததாக சங்ககால புறநானூற்றுப் பாடலில் சொல்கிறது. உணவில் அறுசுவைகளும் அளவாய் இருந்தது. அன்றாட சமையலில் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), மஞ்சள் போன்ற மருத்துவ குணமுள்ள பொருட்களை தவறாது சேர்த்துக் கொண்டனர். நிராகாரமாக கறிவேப்பிலை கரைத்த நீர்மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே அருந்தினர். சாப்பிடும் உணவுகளில் கார மற்றும் அமிலநிலை அறிந்து உட்கொண்டனர். கறிவேப்பிலை, கடுகு, சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை காரநிலையுடைய பொருட்கள். மேலும் இது சீரான செரிமானத்திற்கு பேருதவியாக இருக்கும். வாழையிலையில் உணவு உண்ணும் பழக்கம் இருந்தது என்றனர்.
இந்த விழாவில் வழங்கப்பட்ட உணவு வகைகள் சனிக்கிழமை மாலை மாப்பிள்ளை சம்பா இட்லி, பூங்கார் தோசை, கருடன் சம்பா அவல் உப்புமா,குடவாளை கார தோசை, வரகு தயிர் சாதம்,காரச் சட்னி,தேங்காய் சட்னி, பருப்பு சாம்பார்சுக்கு மல்லி காபிஆகியவையும்,
இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை காட்டு யானை இட்லி, மாப்பிள்ளை சம்பா தோசை, கருங்குருவை கார தோசை, கருப்பு கவுனி இனிப்பு பொங்கல், கலர் பாலை வெண்பொங்கல், கருப்பு கவுனி புட்டு, சோள பணியாரம், நிலக்கடலை சட்னி, மல்லி புதினா சட்னி, சாம்பார் ஆகியவயைும்,
அன்றயை தினம் மதியம் மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம்,அறுபதாம் குருவை தயிர்சாதம்,சீரக சம்பா பூலாவு, குள்ள கார் கருவேப்பிலை சாதம்,ஆத்தூர் கிச்சடி சம்பா சாதம்,கொள்ளு துவையல்,கொள்ளு ரசம்,மா இஞ்சி ஊறுகாய்,கொத்தவரை வத்தல்,வாழைக்காய் பொரியல்,திணை பாயாசம் ஆகியவையும்.
மாலை 4 மணிக்கு நவதானிய சுண்டல்,திருக்கடுகம் டீ வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களின் பாதநாட்டியம் , கலை நிகழ்ச்சி, பாரம்பரிய உணவுகளை பற்றி நாடகம், துணிப்பை விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகள் நடைப்பெற்றது. விழாவில் எம்.எல்.ஏ. தியாகராஜன், பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் , மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்