2 ஆண்டுக்கு பின்னர் தொட்டியம் கால்நடை சந்தை திறப்பு

2 ஆண்டுகளுக்கு பின்னர் தொட்டியம் கால்நடை வார சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-21 13:21 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் கால்நடை வார சந்தை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை வாரசந்தை பழைய சேலம் ரோடு பகுதியில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கால்நடை வார சந்தையில் கால்நடைகள் வாங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடு மற்றும் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரொனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கால்நடை வாரச்சந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கால்நடைகளை தொட்டியம் கால்நடை வாரசந்தை கொண்டுவராமல் தொட்டியத்தை சுற்றியுள்ள கிராமங்களில் சிறிய அளவில் கால்நடை சந்தைகள் போன்று ஏற்பாடு செய்து அங்கு ஆடு, மாடுகளை வாங்கியும் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம் முயற்சி எடுத்து பழமைவாய்ந்த தொட்டியம் கால்நடை வார சந்தையை மீண்டும் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று  செவ்வாய்க்கிழமை காலை 7- மணி முதல் மதியம் 1 -மணி வரை கால்நடை வாரசந்தை தொடங்கியது.

முதல் நாள் என்பதால் ஒரு சில வியாபாரிகள் மட்டுமே ஆடு மாடுகள் வாங்கவும் விற்கவும் வந்து இருந்தனர். இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த கால்நடை வாரச்சந்தை நடைபெறும். ஆடு ஒன்றுக்கு 9- ரூபாயும், மாடு ஒன்றுக்கு 15 ரூபாயும் நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தைக்கு ஆடு மாடுகளை ஏற்றி வரும்  வாகனங்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News