எல்.ஐ.சி. ஊழியர் ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் எஸ்.பி.யிடம் புகார்
தொட்டியத்தில் எல்.ஐ.சி. நிறுவன ஊழியர் ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி. ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. நிர்வாக அலுவலர். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
முசிறி எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் எனக்கு 10 வருடங்களுக்கு மேலாக நன்கு பழக்கமானவர். இவர் என்னிடம்அதிக முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டியும் இரண்டு வருடத்திற்கு பிறகு பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் பணம் பெற்றுள்ளார். மேலும் கரூரில் செயல்பட்டு வரும் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்ய கூறி என்னிடம் மொத்தமாக ரூ.16 லட்சத்து 87ஆயிரத்தை பெற்றுள்ளார். பின்னர் அதற்கான வட்டியும் தரவில்லை, அசல்தொகையும் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது ரூ.5 லட்சத்து 87 ஆயிரத்தை திருப்பி தந்துள்ளார். மீதிதொகையை கேட்ட போது முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்துள்ளார். எனவே முசிறி எல்.ஐ.சி. ஊழியர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ரூ.11லட்சத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்துபணத்தை மீட்டு தருமாறும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.