திருச்சி மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்ல்
திருச்சி மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிவினை காரணமாக தென்காசி, கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களில் தேர்தல் அக்டோபர் மாதம் 2 கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த தேர்தலோடு சேர்த்து திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் மரணம், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 2 ஊராட்சி தலைவர்கள், 19 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 24 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வையம்பட்டி ஒன்றியத்தில் 6-வது வார்டு, மருங்காபுரி ஒன்றியத்தில் 10-வது வார்டு, துறையூர் ஒன்றியத்தில் 13-வது வார்டு ஆகிய 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சிறு மருதூர் ஊராட்சி, கீழரசூர் ஊராட்சி ஆகிய இரு ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மற்றவை ஊராட்சி வார்டு பதவிகளுக்கானதாகும்.
இந்த 24 பதவிகளுக்கான இடைத் தேர்தலில் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 3 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகள் சார்ந்து அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பின்றி பொது சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.