கோலாகலமாக நடந்தகுணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் கடந்த 17-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக அன்று இரவு 7.15 மணிக்கு புண்யாக வசனம் மற்றும் அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 2-வது நாள் நிகழ்வாக 18-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புண்யாக வசனம், பேரீ தாடனம் நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7.30 மணிக்கு ஸ்வர்ண கம்ச வாகன சேவை மற்றும் கண்ணாடி அறை சேவை நடைபெற்றது.
19-ந் தேதி ஸ்வர்ண சிம்ம வாகன சேவையும், 20-ந் தேதி அனுமந்த வாகன சேவையும், 21-ந் தேதி கருட சேவையும், 22-ந் தேதி சேஷ வாகன சேவையும், 23-ந் தேதி கஜ வாகன சேவையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா 24-ந் தேதி நடைபெற்றது. 25-ந் தேதி அஸ்வ வாகன சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று (26-ந் தேதி) தேரோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு திருவாராதன நிகழ்வும், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் தேர்தட்டில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் சரியாக காலை 8.30 மணிக்கு திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தேர் வீதி உலா வந்தது.
தேரோட்டத்தில் திருச்சி வடக்கு தி.மு.க. செயலாளர் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், குணசீலம் ஊராட்சி தலைவர் குருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு காவேரி தீரம் எழுந்தருளல், 5 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 5.30 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, 6. 45 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது
நாளை (27 -ந் தேதி) இரவு 8:30 மணிக்கு உத்வாசன பிரபந்தம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், 28-ந் தேதி இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு, இரவு 10மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை ஆகியவையுடன் விழா நிறைவு பெறுகிறது.