துக்கம் விசாரிப்பதற்காக நாளை முசிறிக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி

துக்கம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முசிறிக்கு வருகிறார்.

Update: 2023-12-29 14:29 GMT

அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. இந்த சூழலில் 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. ஜெ (ஜெயலலிதா), அ.தி.மு.க. ஜா (ஜானகி அம்மாள்) என தேர்தல் களத்தை சந்தித்தன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஜெ அணியில் திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் பிரின்ஸ் தங்கவேல். பிரின்ஸ் டெய்லர் என்ற பெயரில் தையல் தொழில் செய்து வந்த இவர் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் சட்டமன்ற உறுப்பினரானார்.

அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் உடல் நலக்குறைவினால் கடந்த வாரம் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்  கூறி துக்கம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை முசிறிக்கு வருகிறார்.

இது தொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி மு க  செயலாளர் பரஞ்ஜோதி.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் மறைந்த பிரின்ஸ் தங்கவேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூற நாளை (30.12.2023, சனிக்கிழமை) காலை 8.00மணி அளவில் முசிறியில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் வருகை தர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அது சமயம் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Tags:    

Similar News