முசிறி அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: போலீசார் விசாரணை
முசிறி அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல். போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.;
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தண்டலைப்புத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் இரு கிராமத்தை சேர்ந்த மாணவர்களிடையே அடிக்கடி சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தண்டலைபுத்தூர் சந்தை அருகே உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை முன்பு இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த மாணவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் பள்ளி மாணவர்கள் உள்பட இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.